சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி
தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
சனிக்கிழமை தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது,
நம்பிக்கை தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், ரகசிய வாக்கெடுப்புக்கு பேரவை விதியில் இடமில்லை
என்று பேரவைத்தலைவர் தனபால் கூறியதால் பேரவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அவர்கள் அவைக் காவலர்கள் மூலம் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். ரகசிய வாக்கெடுப்பு
நடத்தாததைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும்
வெளியேறினர். பின்னர் டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு,
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி பெருபான்மையை நிரூபித்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்தும், வாக்கெடுப்பை
செல்லாது என அறிவிக்க கோரியும் உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் இன்று முறையிடப்பட்டது.
சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க.வினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தி.மு.க.வின் இந்த முறையீடு நாளை
விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



